2012 - ம் வருட ராசிபலன்


எதிலும் வெற்றி காணும் வரை ஓயாமல் போராடும் குணமுள்ள மேஷ ராசி நேயர்களே! எந்தக் காரியத்தையும் நல்ல முறையில் செய்ய வேண்டும் என்பதற்காக பாடுபடும் குணமுடைய நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் சிறப்பான நிலையை அடைய முடியும். படபடவென்று பேசும் குணமுடைய இந்த ராசிக்காரர்கள் அன்புக்கும், பண்புக்கும் கட்டுப்பட்டு நடக்கும் குணமுடையவர்கள். செவ்வாயைத் தன் ராசி அதிபனாகக் கொண்ட இவர்கள் எந்த செயலையும் தைரியத்துடன் செய்வார்கள். சற்றே முன் கோபமும் உண்டு. மற்றவர்களிடமிருந்து வேலை வாங்கும் திறமை உடைய இவர்கள் புகழ்ச்சிக்கு மயங்கும் குணம் உடையவர்கள். அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு: வேதை(ஆகாதது) கேட்டை நட்சத்திரம். திருமணம் செய்யவும் தொழில் கூட்டு சேர்க்கவும் உங்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி, அதிர்ஷ்ட மலர் - செவ்வல்லி. அனுகூல தெய்வம் - இந்திரன். அதிர்ஷ்டக்கல் - வைடூரியம். அதிர்ஷ்ட நிறம் - கரும் பச்சை. அதிர்ஷ்ட எண் - 1. பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) அனுஷம் நட்சத்திரம். திருமணம் செய்யவும் தொழில் கூட்டு சேர்க்கவும் உங்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், விசாகம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை. அனுகூல தெய்வம் - லட்சுமி. அதிர்ஷ்டக் கல் - வைரம். அதிர்ஷ்ட நிறம் - வெளிர் நீலம். அதிர்ஷ்ட எண் - 2. கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது) விசாகம் நட்சத்திரம். திருமணம் செய்யவும், தொழில் கூட்டு சேர்க்கவும் உங்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள் 6. (ரச்சு) அவைகள்: கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், பூரட்டாதி, உத்திராடம். அதிர்ஷ்ட மலர் - மந்தாரை. அனுகூல தெய்வம் - சிவன். அதிர்ஷ்டக்கல் - மாணிக்கம். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு. அதிர்ஷ்ட எண் - 3. மேஷ ராசிக்குரிய ஆதிக்க கிரகம்: அதிர்ஷ்ட மலர் - செண்பகம். அதிர்ஷ்டக் கல் - பவளம். அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு, வெண்ணிறம். அதிர்ஷ்ட திசை - தெற்கு. அதிர்ஷ்ட எண் - 9. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் - சுப்பிரமணியர். பொதுப்பலன்: திறமைக்கு தலை வணங்கும் குணமுடைய மேஷ ராசி நேயர்களே! இந்த 2012 புத்தாண்டு உங்களுக்கு எப்படி மலர்கிறது என்று பார்ப்போம்.


ஜனவரி

இந்த மாதத்தில் நீங்கள் கவனமாக இருந்தால் எல்லா வகையான நிலைமைகளையும் பொறுமையாகச் சமாளிக்கலாம். விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்கிறார்களே அப்படித்தான் நீங்களும் எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்துச் செய்ய வேண்டும். புத்தாண்டின் முதல் மாதத்தின் முற்பாதி மிகவும் யோகமாகவே அமைய இருக்கின்றது. பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்யவும்.

பிப்ரவரி

இந்த மாதத்தில் உங்களுடைய செயல்பாடு நிலையானதாக இராது. சில சமயங்களில் பம்பரமாகச் சுழன்று பல காரியங்களை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். உங்களிடம் காணப்படும் வேகம் பலரைப் பிரமிக்க வைக்கும். உறவினர்களுடன் எதிர்பாராத வகையில் வாக்குவாதங்கள் ஏற்படும். அந்த வாக்கு வாதங்கள் மனக் கசப்பாகவும் மாறலாம். பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமனை வழிபாடு செய்யவும்.

மார்ச்

இந்த மாதத்தில் தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். உத்தியோகம் பார்ப்பவர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். இம் மாதத்தைப் பொறுத்தவரை முற்பாதி வழக்கம் போல் ஓடும். மாத பிற்பாதியில் இருந்து சில சிக்கல்கள் துவங்கும். எதிர்பார்த்த ஆதரவுகள் எட்டி நின்று வேடிக்கை பார்க்கும். பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்யவும்.

ஏப்ரல்

இந்த மாதத்தில் எல்லாவற்றிலுமே சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு மீட்டர் ஏறினால் நான்கு மீட்டர் சறுக்கும். ஆயிரம் ரூபாய் கைக்கு வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாது. பின்னாலேயே ஐயாயிரம் ரூபாய்க்கு செலவு ஓடி வரும். மாத பிற்பகுதியில் இருந்து சக்கைப் போடு போட இருக்கின்றீர்கள். பரிகாரம்: தினமும் சூரிய வழிபாடு செய்யவும்.

மே

இந்த மாதத்தில் உங்களால் சிறுசிறு வெற்றிகளையும், இலாபங்களையும் தேடிக் கொள்ள முடியும். ஆனால் எல்லாமே காலதாமதமாகத் தான் கிட்டும். பெற்றோர் வகையில் சற்று அதிகமாக மருத்துவச் செலவு ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பூசல்கள் தோன்றும். பரிகாரம் - தினமும் கணபதி வழிபாடு செய்யவும்.

ஜூன்

இந்த மாதத்தில் எதைத் தொட்டாலும் ஏதாவது தடை தோன்றும். ஆனால் சற்றுப் பொறுமையாகத் தொடர்ந்து முயற்சி செய்தால் அந்தக் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்கலாம். அலுவல் சங்கடங்கள், அசௌகரியப் பிரச்சினைகள் தொடர்ந்தாலும் எதிர்பாராமல் கிடைக்கும் தகுந்த உதவிகள் உங்களுக்கு ஆறுதல் தரும். சில பாதிப்புகள் கடுமையாகத் தாக்குவது போல் பாய்ந்து வரும். ஆனால் உங்களை இலேசாக உரசிவிட்டுப் பறந்தோடி விடும். பரிகாரம்: அம்மன் வழிபாடு மிகவும் நல்லது.

ஜூலை

இந்த மாதத்தில் தொழில் வியாபாரத்தில் தொடர்ந்து நெருக்கடிகள் காணப்பட்டாலும் கிடைக்க வேண்டிய இலாபம் குறையாமல் கிடைக்கும். உததியோகம் பார்ப்பவர்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும். கூடுதல் வேலைப் பளுவால் உடல் நலம் அதிகமாக இருக்கும். பிள்ளைகள் வகையில் சில செலவுகள் ஏற்படும். பரிகாரம்: அனுமனை வழிபடுங்கள்.

ஆகஸ்ட்

இந்த மாதத்தில் செலவுகளுக்குப் பஞ்சம் இராது. திரும்பிய பக்கமெல்லாம் செலவுகள் தான். ஆனால் அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் எல்லா செலவுகளையும் சமாளிக்கும் அளவிற்கு எங்கிருந்தாவது பணம் கைக்கு வந்து விடும். பணம் வரும் போது சில சௌகரிய வசதிகளும் சேர்ந்து வரும். பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்யவும்.

செப்டம்பர்

இம்மாதத்தில் குடும்பத்தில் சில முணுமுணுப்புகள் கேட்டுக் கொண்டே இருக்கும். எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். இம்மாதத்தைப் பொறுத்தவரை எதிலும் வெற்றி நமக்குத்தான் என்ற உறுதியோடு செயல்படுவீர்கள். பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
அக்டோபர்
இம்மாதத்தில் காலையில் எழுந்ததிலிருந்து அன்றாட வேலைகளைச் செய்து முடிப்பதில் மிகுந்த அவசரம் காட்டுவீர்கள். அதனால் சில தவறுகள் ஏற்பட்டு உங்களைத் தடுமாற வைக்கும். இம்மாதத்தைப் பொறுத்தவரை தாங்கள் அவசியம் நிதானத்தை கடைபிடித்தே தீர வேண்டும். பரிகாரம்: துர்க்கையை வழிபடுங்கள்.

நவம்பர்

இம்மாதத்தில் தொழில், வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகம் பார்ப்பவர்களின் கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் கிட்டும். தங்கள் பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து நிதானித்து செயல்பட்டு வெற்றி வாகை சூட இருக்கின்றீர்கள். பரிகாரம்: தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்யுங்கள்.


டிசம்பர்

இம்மாதத்தில் குடும்பத்தில் உற்சாகம் நிறைந்திருக்கும். மனைவி, மக்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவீர்கள். பரிகாரம்: அனுமனை வழிபடவும்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India